கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை முதல் விடுவிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், விடுபட்ட மற்றும் புதிய பயனாளர்களைச் சேர்க்கக் கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்தச் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை விடுவிக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கான அரசின் திட்டச் சாதனைகளும், பெண் சாதனையாளர்களின் அனுபவங்களும் எடுத்துரைக்கப்பட உள்ளன.
இந்த இரண்டாம் கட்டத்தில் சுமார் 15 லட்சம் பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
