தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தேரியூர் பகுதியில், வேல்குமார் (27) என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரை இருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்தவர்கள் தேரியூரைச் சேர்ந்த புனிதராஜ் @ செல்வம் மற்றும் அவரது அண்ணன் நாகராஜ் (28) என்பவர்கள் ஆவர்.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த வேல்குமாரைத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும், மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீஸார், தலைமறைவாக இருந்த அண்ணன், தம்பி இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

விசாரணையில், புனிதராஜும், கொல்லப்பட்ட வேல்குமாரின் அக்காவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தட்டிக் கேட்டதால் வேல்குமாருக்கும் புனிதராஜுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காரணமாகவே, புனிதராஜும் அவரது அண்ணன் நாகராஜும் சேர்ந்து வேல்குமாரை வெட்டிக் கொலை செய்ததாகப் புனிதராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.