கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், ரேபிடோ (Rapido) செயலி மூலம் ஆட்டோ பயணம் செய்தபோது ஏற்பட்ட அசாதாரண அனுபவத்தை இணையத்தில் (Reddit) பகிர்ந்துள்ளார். இதனால், செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ சேவைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரிய விவாதம் எழுந்துள்ளது. அந்தப் பெண் ரேபிடோ ஆட்டோவை முன்பதிவு செய்து, பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில், ஆட்டோ டிரைவர் திடீரென்று சாலையில் காத்திருந்த தன் நண்பர் ஒருவரைப் பயணத்தில் சேர்த்துக் கொண்டார்.
இதற்கு அந்தப் பெண்ணிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை. ஆட்டோ டிரைவரும் அவரது நண்பரும் முன்புற இருக்கையில் அமர்ந்து, பயணத்தின் முழுவதும் பேசிக்கொண்டே வந்துள்ளனர். அவர்கள் தன்னை மிரட்டவோ, தொந்தரவு செய்யவோ இல்லை என்றாலும், மூன்றாவதாக ஒரு நபர், அதுவும் டிரைவரின் நண்பர், அனுமதியின்றிப் பயணத்தில் சேர்ந்தது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த அசௌகரியத்தையும் பயத்தையும் கொடுத்துள்ளது.

இதனால், அவர் பயணத்தின்போது இயர்போன் பயன்படுத்தாமல், மிகவும் விழிப்புடன் இருந்ததாகப் பதிவிட்டுள்ளார். “இது சாதாரண விஷயமா? சட்டப்படி இது அனுமதிக்கப்பட்டதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், ரேபிடோ நிறுவனத்தில் புகார் அளிக்கலாமா என்றும் கேட்டுள்ளார். இந்தச் சம்பவம், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநரின் பொறுப்புணர்ச்சி குறித்து சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
