சென்னையில் நடைபெற்ற அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக உறுப்பினர் திவ்யா சத்யராஜ், தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயை வன்மையாக விமர்சித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா, திமுகவில் இணைந்த பின் பல்வேறு மேடைகளில் விஜயையும், தவெக இயக்கத்தையும் குறிவைத்து கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திவ்யா சத்யராஜ், கரூர் நிகழ்வை குறிப்பிட்டு விஜயின் அணுகுமுறையை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: “மேடையில் நின்று பாடுபவர் தலைவர் அல்ல; மக்களுக்காக பாடுபவர் தான் உண்மையான தலைவர். திரையில் நடனமாடுவது தலைமை அல்ல; தரையில் இறங்கி மக்களுக்கு துணை நிற்பவரே உண்மையான தலைவர். ‘எவன் செத்தா எனக்கென்ன’ என்ற மனப்போக்குடன் ஆபிஸ் ரூமில் உட்கார்ந்து ஸ்லோ மோஷனில் பேசுவது தலைமை அல்ல.” என்றார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய அவர், “துபாய் பயணத்தை ரத்து செய்து மக்களுக்காக உடனே ஓடி வந்தவர் நம் துணை முதல்வர். அவர்தான் உண்மையான தலைவர்,” என்று புகழ்ந்தார். கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்குப் பிறகு தவெக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியதை திவ்யா கண்டித்தார். “ஏன் செந்தில் பாலாஜி உடனே வந்தார் எனவா கேட்கிறார்கள்? அது அவருடைய செயல்திறன். அன்பில் மகேஷ் ஏன் அழுதார்? அது அவரின் மனதை காட்டுகிறது. ஜோதிமணி ஏன் ஓடி வந்தார்? அது மக்களுக்கான கருணை,” என அவர் விளக்கினார்.
“நீங்கள் கூறுவது லாஜிக்கே இல்லாமல் உள்ளது. எல்லாவற்றையும் நம்மிடம் அனுமதி கேட்டுத்தான் செய்கிறீர்களா? காவல்துறை யாரைக் காப்பதற்காக இருக்கிறது? காவல்துறையினரை தாக்குவது, மரத்தில் ஏறுவது இதை ஒரு தலைவர் தடுக்க வேண்டாமா?” என விஜயை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் திவ்யா சத்யராஜின் இந்த கூற்றுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
