சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலுக்கு முன்பும் பின்பும் கூட்டணிகள் மாறுவது அரசியலில் இயல்பான ஒன்றுதான் என்றார். மேலும் அவர் பேசுகையில், “கடந்த 2014-ஐ தவிர்த்து 2004 முதல் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருந்தோம். ஆனால், இந்தத் தேர்தலில் விஜய் முதல்வராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் ஒருவேளை திமுக கூட்டணியிலேயே நீடித்திருந்தாலும் கூட, திமுகவால் தனித்து ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தவெகவும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவியதால், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் தான் தவெக அரசுக்கு காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன என்றும், இது முற்றிலும் இயல்பான முடிவுதான் என்றும் அவர் விளக்கமளித்தார். தவெக அரசு குறித்து யாரும் அவசரமாக ‘ரன்னிங் கமென்ட்ரி’ கொடுக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், அமைச்சர் செங்கோட்டையன் போன்ற சீனியர்களைத் தவிர 100-க்கும் மேற்பட்டோர் முதன்முறை எம்எல்ஏக்களாக ஆகியுள்ளதால் அவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்ஸ்டாகிராம் மூலம் அமைச்சர் தொழில் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்றும், எலான் மஸ்க்கே தனது அறிவிப்புகளை ‘எக்ஸ்’ தளத்தில்தான் வெளியிடுகிறார் என்றும் கூறினார்.
