ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி வந்த 300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 9) நடைபெற்றது. இதில் தவெக மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் உரையாற்றிய அவர், “இந்த இயக்கத்தில் நான் இணைந்தபோது, இளைஞர்கள் அனைவரும் விஜயே இளைஞர்களின் எழுச்சி நாயகன் என தெரிவித்தனர். அவருக்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயார் என உறுதியளித்தனர். 2026ல் விஜய் முதலமைச்சராக வர வேண்டும் என்ற இலக்குடன் தவெக செயற்பட வேண்டும்,” என்று கூறினார்.
“இப்போது சிலர் ‘இந்த இயக்கம் எங்கே?’ என்று கேட்கலாம். ஆனால் மக்கள் மனதில் எழுச்சியை உருவாக்கும் சக்தி தவெக தலைவருக்கு உண்டு. எம்ஜிஆரைப் போலே, சட்ட ஒழுங்கு மற்றும் மக்களின் சேவைக்காக விஜய் பாடுபட்டு வருகிறார். அவரை வெற்றியடையச் செய்து வரலாறு படைப்போம்,” என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாஜக குறித்து விமர்சித்த அவர்,
“பாஜகவில் தற்போது தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் எங்கே இருந்தார், எங்கு சென்றார் என்பதை மக்கள் அறிவார்கள். அவர் நிற்கும் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட காப்பாற்ற முடியாது,” என்றார்.
மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை குறித்தும் அவர் பேசினார்:
“நட்டா ‘இந்த இயக்கம் ஒரு வார்டிலும் ஜெயிக்காது’ என கூறினார். உண்மையில் தவெக நாளை 234 தொகுதிகளையும் வெற்றி பெறும் திறன் கொண்டது,” என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். வரும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான போலீஸ் அனுமதி பெற செங்கோட்டையன் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
மேலும் கரூர் சம்பவத்திற்குப் பின்னர் விஜய் காஞ்சிபுரம், புதுச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றியிருந்தாலும், கொங்கு மண்டலத்தை குறிவைத்து நடைபெற உள்ள ஈரோடு கூட்டம் மிகவும் பரபரப்பான அரசியல் மேடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
