சேலம், ராமகிருஷ்ணாரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி (34) என்பவர் திருமணமாகாதவர். இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான அதிமுக பிரமுகர் ஆவார். பி.இ. பட்டதாரியான பாரதி, சங்கர் நகரில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் வேலை செய்து அங்கேயே தங்கி வந்தார். இவரும் இவரது நண்பரான நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த உதயசரண் (49) என்பவரும், முன்தினம் இரவு சினிமாவுக்குச் சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் உயர் அதிகாரியாக இருக்கும் உதயசரண், பின்னர் பாரதி தங்கியிருந்த அறைக்கே சென்றுள்ளார். அங்கு பாரதி சிகரெட் பிடித்தபடி மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக உதயசரண் அவரைத் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், பாரதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாரதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தியதால், அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், பாரதியின் மூக்கின் மீது ரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரியவந்தது. இதனால், தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் உதயசரணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் பாரதியைத் தாக்கியதாகவும் உதயசரண் கூறியுள்ளார். மேலும், பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் உதயசரண் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.