தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், திங்கட்கிழமை 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கள்ள உறவுச் சந்தேகத்தின் காரணமாக, தன் ‘லிவ்-இன்’ துணையால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைன்சா மண்டலத்தின் கும்சரா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அஸ்வினி என்பவர், தன் முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, நாகேஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கிய ஜூலை மாதத்தின்போதே அஸ்வினி ஒரு தேநீர்க் கடையைத் தொடங்கினார். அவர் அடிக்கடி பல ஆண்களுடன் குறுஞ்செய்தி மூலம் உரையாடியதால், தன் துணைவி மீது நாகேஷுக்குக் கள்ள உறவுச் சந்தேகம் ஏற்பட்டதாக பைன்சா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திங்கட்கிழமை அன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த நாகேஷ் அஸ்வினியைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இரத்தக் கறையுடன் கூடிய சட்டையுடன் நாகேஷ் கடைக்குள் அமர்ந்திருக்கும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காலை மணி 10:30 அளவில் நடந்ததாகவும், இருவருக்கும் இடையே உறவு மற்றும் பணப் பிரச்னைகள் இருந்ததாகவும் பைன்சா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொலைக் குற்றத்திற்காக நாகேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நாகேஷ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
