செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் மக்களை வியக்க வைத்து, வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு சிறுவன் மாடியில் நின்று கொண்டிருக்க, ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து அவனை ஏற்றிக்கொண்டு செல்லும் 10 விநாடி காணொளி ஒன்று ட்விட்டரில் பரவி வருகிறது.

 

பார்ப்பதற்கு உண்மையானது போலவே இருக்கும் இந்த காணொளி, ஏஐ கொண்டு மிகவும் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘@iamafsarhasan’ என்ற கணக்கு மூலம் “இவருக்கு எவ்வளவு பணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற கேலியான தலைப்புடன் பகிரப்பட்ட இந்தக் காணொளியை இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதைக் கண்ட பயனர்கள் பலர், “இவரிடம் பணம் இல்லை, இது ஏஐ தான்”, “இந்த தொகுப்பு ஆச்சரியமாக உள்ளது”, “பணம் இல்லாவிட்டாலும் ஏஐ செயலிகளைக் கொண்ட கைப்பேசி நிச்சயம் இருக்கும்” எனப் பல்வேறு விதமான எதிர்வினைகளை பதிவிட்டு வருகின்றனர். செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால், இத்தகைய படைப்பாற்றல் நிறைந்த காணொளிகளை எளிதாக உருவாக்க முடிவதையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.