பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பிளஸ்-2 மாணவர் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவரின் மகன் கவியரசன் (17), தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்த பள்ளியில் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்குள் கடந்த சில மாதங்களாகவே பதட்டம் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பிளஸ்–1 மாணவர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து எச்சரிக்கை வழங்கி பிரச்சினையை சமரசப்படுத்தினர்.

இந்த சூழ்நிலையிலேயே, இந்த மாதம் 3-ஆம் தேதி மீண்டும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 4-ஆம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கவியரசன் பிளஸ்–1 மாணவர்களால் தடுக்கப்பட்டார். வாக்குவாதம் மோசமடைந்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

இதில், பிளஸ்–1 மாணவர்கள் மரக்கட்டையால் கவியரசனை தலையில் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். கடுமையாக காயமடைந்த அவரை முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு, பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கும், அதன் பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றி சிகிச்சை அளித்தனர். ஆனால், மிகுந்த முயற்சிகளுக்கும் பிறகும் கவியரசன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்துக்கு தொடர்புடையதாக பிளஸ்–1 மாணவர்கள் 15 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் தஞ்சை இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.