தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த குடும்பத்தின் 17 வயது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது மூன்று மகள்களுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சி, செம்பிரான்குளம் கிராமத்துக்கு வந்து குடியேறி, அங்கு தனியார் எஸ்டேட்டில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அந்த தம்பதியின் மூத்த மகள், 17 வயது சிறுமி, திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பெற்றோர் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, செம்பிரான்குளத்தை சேர்ந்த விவசாயி தோப்படியான் (45) சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர், அவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்ததும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சிறுமியை மீட்டு பாதுகாப்பில் எடுத்தனர். மேலும், தோப்படியான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
