திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவருக்கும், விஜயா என்பவருக்கும் திருமணமாகி கௌசல்யா, சோபியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், விநாயகம் – விஜயா தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்யாறு டவுன், நேரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
பிரியாணி கடையில் கூலி வேலை செய்து வந்த விநாயகம், கடந்த ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். சித்தாளாகப் பணியாற்றி வந்த மனைவி விஜயாவிடம் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதும், குடிக்கப் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும் விநாயகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே நாள்தோறும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
சம்பவ நாளன்று இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், விநாயகம் தனது மனைவி விஜயாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற மனைவி விஜயா, அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் கணவர் விநாயகத்தின் கழுத்தில் வெட்டினார். இதில் படுகாயமடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் இறந்ததைக் கண்ட விஜயா, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த செய்யாறு நகர போலீசார், விநாயகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விஜயாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவதும், பணம் கேட்டு கடுமையாகத் தாக்குவதும் தொடர்ந்ததாலேயே ஆத்திரத்தில் கொலை செய்ததாக விஜயா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதை மற்றும் குடும்பப் பிரச்னையால் கணவரே மனைவியால் கொல்லப்பட்ட இச்சம்பவம், செய்யாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
