கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி மஞ்சுநாத் (45) இரு மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஒன்றுகூடி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர். இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஞ்சுநாத் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 13 மற்றும் 10 வயதுடைய இரண்டு மகள்கள், மேலும் தாயார் என குடும்பத்தினர் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையாக மாறிய மஞ்சுநாத், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக தனது இரு மகள்களையும் திடீரென பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தார். இதில் சந்தேகம் கொண்ட ஆசிரியர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த சிறுமிகளிடம் காரணம் கேட்டபோது, தங்கள் தந்தை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே கூறிவிடுவோம் என்ற பயத்தில் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்ததாகவும் அழுகையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் மஞ்சுநாத்தின் தாயிடம் கேட்டபோது, “என்னையும் முன்பு மஞ்சுநாத் தவறான முறையில் அணுக முயன்றான்; நான் கத்தியதால் தப்பித்துக் கொண்டேன்” என அவர் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த தகவல் கிராம முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம மக்கள் குழுவாக போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, மஞ்சுநாத்துக்கு துக்கு தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு மகள்களையும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் மஞ்சுநாத்தை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் சித்ரதுர்கா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
