பீகார் மாநிலத்தில், 25 வயதான பிரீதி குமாரி என்ற திருமணமான பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானில் கூலி வேலை செய்து வரும் அனில் ராய் என்பவரின் மனைவியான பிரீத்தி குமாரி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது அண்ணன் ராகவ் குமாருடன் வீடியோ காலில் பேசிவிட்டு, தண்ணீர் பிடிக்கச் செல்வதாகக் கூறி போனை வைத்துள்ளார். ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் ராஜஸ்தானில் இருந்து கணவர் அனில் ராய் போன் செய்து பிரீதி இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்து அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த பெண்ணின் குடும்பத்தினர், பிரீதியின் உடல் வரண்டாவில் கிடப்பதையும், அவரது மாமியாரும் மைத்துனியும் வீட்டின் கதவை உள் பக்கமாகப் பூட்டிக்கொண்டு நிம்மதியாகத் தூங்குவதையும் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இது குறித்து மூன்றாம் வகுப்பு படிக்கும் பிரீதியின் 10 வயது மகன் அபினவ் போலீசாரிடம், பாட்டி அம்மாவுக்கு ஏதோ ஒரு திரவத்தைக் கட்டாயப்படுத்திக் குடிக்கக் கொடுத்தார்,

அதைக் குடித்த உடனேயே அம்மாவின் உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டார்” என அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளார். “என் தங்கச்சியை அந்த ராட்சசி மாமியார் தான் விஷம்வச்சு கொன்னுட்டா” என அண்ணன் ராகவ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொடூர மாமியார் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.