மகாராஷ்டிரா மாநிலத்தில், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு தனியார்  பள்ளி அருகே வசிக்கும் கிசான் ஷிண்டே (48), புதன்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது இருட்டில், வீட்டின் வெளியே அறுந்து கிடந்த மின்சார ஓயரில் இருந்து கசிந்த உயர் மின்சாரத்தை எதிர்பாராதவிதமாக அவர் மிதித்ததால் பயங்கரமான முறையில் தூக்கி வீசப்பட்டு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காக மனைவி கங்குபாய் (46), மகன் சச்சின் (26) மற்றும் மகள் ஆர்த்தி (22) ஆகியோர் அடுத்தடுத்து ஓடி வந்துள்ளனர்.

ஆனால், மின்சாரத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால், ஒருவரைக் காப்பாற்ற முயன்ற போது அடுத்தடுத்து நால்வரும் மின்சார ஒயரோடு ஒட்டிக்கொண்டு சில நொடிகளிலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து பல்டான் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் புஜ்பால்தலைமையிலான போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மின்வாரியத்தின் அலட்சியம் தான் இந்த விபத்துக்குக் காரணம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.