கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், முர்கோடு போலீஸ் நிலைய எல்லைக்குள், 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை இருவர்  பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெட்டிகை அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் அந்த சிறுமி, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு நடந்து செல்லும்போது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள மாவு மில் அருகே வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மணிகாந்த் தின்னிமணி மற்றும் ஈரண்ணா சங்கம்மன்னவர் ஆகிய இருவரும் துரத்திச் சென்று, அருகிலுள்ள கரும்புத்தோட்டத்திற்குள் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கு இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்பிய சிறுமி, நடந்ததை பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

புகார் கிடைத்தவுடன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர். தலைமறைவாக இருந்த இருவரையும் வலைவீசி தேடி, போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிறுமி மீது நிகழ்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.