மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தீபம் ஏற்றச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 93 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறிய நிலையில், காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதி மறுத்துள்ளனர். இதனால், அங்குப் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீதும் சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
