விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள மைலி இலுப்பைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார் (18), அரசு ஐ.டி.ஐ.யில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.
அவர், தனக்கு மாதந்தோறும் வந்த கல்வி உதவித்தொகையைச் சேமித்து வைத்து, செம்மறி ஆடு ஒன்றை வாங்கி மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, செந்தில்குமார் ஆசையாக வளர்த்த அந்தச் செம்மறி ஆடு பரிதாபமாக இறந்து போனது.
தான் ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் செந்தில்குமார் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். திடீரென விரக்தியடைந்த அவர், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விபரீத முடிவெடுத்தார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், தீவிர சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தான் ஆசையாக வளர்த்த ஆடு இறந்த துக்கத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியது.
