நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், காதல் தகராறு காரணமாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த வாலிபர் ஒருவர் நேற்று மாலை இளம்பெணை சந்திப்பதற்காக பீளமேடுக்கு வந்ததாக தெரிகிறது.

விடுதியின் முன்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் கோபமடைந்த இளம்பெண் வேகமாக விடுதிக்குள் சென்று விட்டதாகவும், அதன் பின்னர் வாலிபரும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிது நேரத்தில், மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விடுதியின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். பெரும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர், அக்கம் பக்கத்தினரால் சம்பவ இடத்திலிருந்தே மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணின் முயற்சி ஏன் நடந்தது? வாக்குவாதத்தின் காரணம் என்ன? என்பதைக் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.