புதுச்சேரி எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ்குமார் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மடுக்கரையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சுராஜ்குமாரின் மனைவிக்கு, அதே கம்பெனியில் வேலை செய்யும் பப்பு என்பவருடன் திருமணத்தை மீறிய கள்ள உறவு இருந்துள்ளது.
இந்த விஷயம் சுராஜ்குமாருக்குத் தெரியவரவே, அவர் பப்புவுடன் சண்டையிட்டும், பப்பு அந்த உறவைத் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுராஜ்குமார், பப்புவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
அதன்படி, இரண்டு நாட்களுக்கு முன் சுராஜ்குமார் பப்புவை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மோட்சகுளம் பகுதியிலுள்ள ஒரு மனைப் பிரிவுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்தபோது, சுராஜ்குமார் மீண்டும் சண்டையிட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பப்புவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் பப்பு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். கொலைக்குப் பிறகு, சுராஜ்குமார் தன் மனைவிக்கு போன் செய்து தான் கொலை செய்த செய்தியைத் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சுராஜ்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்தக் கொடூரக் கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
