நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளுக்கு அதிவேகமே முக்கியக் காரணமாக உள்ளது. வாகனங்கள் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் செல்வதால், அவை ஒன்று மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகின்றன அல்லது தாமாகவே விபத்தில் சிக்குகின்றன. இதுபோன்ற அபாயகரமான விபத்துகளில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களைப் பயங்கரமாகப் பார்க்க வைத்துள்ளது.

 

இந்த வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் வேகமாகச் செல்வதைக் காணலாம். சில வினாடிகள் எல்லாம் சாதாரணமாக இருப்பதுபோல் தோன்றினாலும், திடீரென நடக்கும் விபத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, மனதைக் கலங்கடித்துள்ளது. வீடியோவைப் படம்பிடித்த அந்தப் பைக்கர், மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்துகொண்டே வீடியோ பதிவு செய்கிறார்.

அவர் ஒரு சரக்கு லாரியை கடந்து செல்லும் வேளையில், திடீரென மற்றொரு பைக் அவருக்கு முன்னால் வருகிறது. முன்னால் திடீரென வந்த பைக்கைக் கண்டு, முதல் பைக்கர் தனது சமநிலையை இழந்து, அதன்மீது மோதி விடுகிறார். மோதிய வேகத்தில் இரு பைக் ஓட்டுநர்களும் சாலையில் பயங்கரமாகக் கீழே விழுகின்றனர்.

இதில், முன்னால் வந்த பைக் ஓட்டுநர் சாலையின் நடுவில் உள்ள தடுப்பின்மீது நேரடியாக மோதிச் சிதறுகிறார். அவர்கள் கீழே விழுந்த விதத்தைப் பார்த்தாலே, அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியும். இந்தச் சம்பவம் நடந்த இடமும், பைக் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரமும் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், இந்த கோர விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

இந்த 16 வினாடிகள் வீடியோவை 86,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்து, பலவிதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், “முன்னால் சென்ற பைக் பாதையை மாற்றியதே தவறு” என்று எழுதியுள்ளார். மற்றோருவர், “சாலைப் பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.