புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேலு. மாற்றுத்திறனாளி கட்டிடத் தொழிலாளியான இவரும், இவரது மனைவியும் கூலி வேலை செய்து தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தனர்.
இவர்களின் மகள் நிதிலா (Nithila) பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, அரசுப் பணி மற்றும் குரூப் 1 தேர்வில் உயர் பதவியைப் பெறுவதை இலக்காகக் கொண்டு கடினமாகப் படித்து வந்தார்.
வறுமையில் இருந்த குடும்பத்தில், நிதிலா குரூப் 4 தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று, கோவையில் உள்ள வனத்துறைக் குற்றப்பிரிவில் 6 மாதங்களாகப் பணியாற்றி வந்தார்.
தனது மகள் குடும்பத்தின் முதல் அரசு ஊழியர் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த பெற்றோர், வறுமை நீங்கிவிடும் என்றுச் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால், அவரது உயரிய இலக்கை எட்டும் முன்னரே, திடீரென அவருக்குச் சோகம் நேர்ந்தது. அரசுப் பணியில் சேர்ந்து, கலெக்டர் ஆக வேண்டும் என்ற பெரிய இலக்குடன் இருந்த நிதிலா, சமீபத்தில் தனதுத் தோழியிடம் தொலைபேசியில், “நாம இந்த வேலையோட முடிச்சுடக் கூடாது, குரூப் 1-க்குத் தயாராகி கலெக்டர் ஆகணும்” என்று கூறி ஊக்கப்படுத்தியுள்ளார்.
ஆனால், அதற்கு அடுத்த நாளே, அதாவது நேற்று முன்தினம், வழக்கம்போல நுண்ணறிவு தகவல் சேகரிப்புப் பணியில் இருந்தபோது, அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நிதிலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். கலெக்டர் கனவோடு இருந்த மகள் இப்படிச் சடலமாக வந்ததைக் கண்டுப் பெற்றோரும் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறினர்.
இந்தச் சோகச் சம்பவம் கோவை வனத்துறை அலுவலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. பணியின்போது உயிரிழந்த நிதிலாவின் இறுதிச் சடங்கில், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.
அவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய அனைத்து அரசு இழப்பீடுகளையும் விரைவில் பெற்றுக் கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
