கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜகோபால்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளக்காதல் தொடர்பான தகராறு இரண்டு பேரின் உயிரை காவுகொண்டது.
அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணா (51) தனியார் நிறுவன ஊழியர். மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், அதே பகுதியில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த லலிதா (49) என்பவருடன் பழகி வந்தார். லலிதாவும் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தவர்.
இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக, பெங்களூரு இந்திரா பிரியதர்ஷினி நகரில் உள்ள வாடகை வீட்டில் கணவன்–மனைவி போல இணைந்து வாழ்ந்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக லலிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் லட்சுமி நாராயணா, இதற்காக அடிக்கடி தகராறு செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதே தகராறு காரணமாக, நேற்று முன்தினம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த லட்சுமி நாராயணா, வீட்டில் இருந்த சேலையால் லலிதாவின் கழுத்தை நெரித்ததில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி நாராயணா, அதே சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த நாள் காலை வீடு திறந்திருந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, லலிதா தரையில் உயிரிழந்த நிலையில் மற்றும் லட்சுமி நாராயணா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுகுறித்து ராஜகோபால்நகர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவத்திற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
