கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் பேரன் தேவேந்திர கெலாட் மீது அவரது மனைவி திவ்யா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தேவேந்திர கெலாட், 2018 ஆம் ஆண்டு திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் தன்னை வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாக திவ்யா புகார் அளித்துள்ளார்.
திவ்யா தனது புகாரில், மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும் பணம் தர முடியாத நிலையில் தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் உளரீதியில் சித்திரவதை செய்ததாகவும் “பணம் கொண்டுவராவிட்டால் உணவு கிடையாது” என மிரட்டப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், 2025 ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தேவேந்திர கெலாட் தன்னை தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளியதாகவும், இதனால் முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டை பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். திவ்யா மேலும், திருமணத்திற்கு முன் தனது கணவருக்கு மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தனது மகளை கூட பார்க்க விடாமல் தடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
திவ்யாவின் இந்த புகாரின் பேரில் மத்தியப் பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டபோது, குடும்பத்தின் சார்பில் ஜிதேந்திரா கெலாட் கருத்து தெரிவிக்கத் தவிர்த்து, “யாராலும் எவர்மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். விரைவில் உண்மைகள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் இரு மாநில அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
