சீனாவில் நள்ளிரவு 3 மணியளவில் ஒரு மூன்று வயதுச் சிறுவன் குளிரான சாலையில் தனியாக அலைந்த சம்பவம், இணையத்தில் பரவலான பாராட்டுகளைக் குவித்து வருகிறது. மிகவும் மெல்லிய ஆடையை மட்டும் அணிந்து, காலில் செருப்பின்றி அந்தச் சிறுவன் நடுங்கும் குளிரில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்ட உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்திச் சிறுவனுக்கு உதவினார்.

 

குழந்தையின் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட்ட அவர், முதலில் சிறுவனை குளிர் இல்லாத ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். சில நிமிடங்களில் அவ்வழியாகச் சென்ற மற்றொரு காரோட்டியும் உதவிக்கு வந்து, சிறுவனைக் குளிரிலிருந்து காக்கும் வகையில், தனது காருக்குள் அமர வைத்து கதகதப்பை அளித்தார்.

உரிய நேரத்தில் உதவ வந்த இந்த இரு “நல்ல சமாரியர்களுக்கு” பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் விரைந்து வந்து விசாரித்து, சிறுவனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், சிறுவனின் தாய் கூடுதல் நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், தனியாக விழித்தெழுந்த சிறுவன் பயந்துபோய், தாயைத் தேடி வீட்டுக்கு வெளியே ஓடி வந்து விட்டதாகவும் தெரியவந்தது.

இவ்வளவு கடுமையான குளிரில் தங்கள் மகனின் பாதுகாப்பை உறுதி செய்த இரு உதவிக்கரங்களுக்குச் சிறுவனின் பெற்றோர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இந்த மனிதநேயமிக்க செயலுக்காக அந்த டெலிவரி ஊழியருக்கும், காரோட்டிக்கும் உள்ளூர் காவல்துறையினர் “கெளரவச் சான்றிதழ்களை” வழங்கிப் பாராட்டினர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, “மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது” என்பதை நினைவூட்டுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.