தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில், திருநெல்வேலி மாவட்டம் மானூர் பிள்ளையார் குளம் பகுதியில் இன்று மாலை 4 வயது சிறுமி ஐஸ்வர்யா விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென அச்சிறுமியின் மீது பாய்ந்து கடித்துக் குதறியது.

இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், நெல்லையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.