சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதுடன், இருவரும் கணவன் மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கள்ளக்காதலர்களான பிரியங்காவுக்கும் கோவிந்தராஜுக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், பிரியங்கா மீது கடும் ஆத்திரத்தில் இருந்த கோவிந்தராஜ், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

கொலை செய்யத் திட்டமிட்ட கோவிந்தராஜ், பிரியங்காவை நைசாகப் பேசி மணலி பகுதிக்கு வரவழைத்தார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரத்தின் உச்சியில் இருந்த கோவிந்தராஜ், அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து, பிரியங்காவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியங்கா துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், கள்ளக்காதலன் கோவிந்தராஜ், வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலியை, கள்ளக்காதலனே பாட்டிலால் குத்திக் கொலை செய்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.