வேலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர், விஜய்யின் அரசியல் வருகையை வி.சி.க.வே முதலில் வரவேற்று வாழ்த்தியதாகக் குறிப்பிட்டார். விஜய் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன.

அவர் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், இதுவரை அவர் கொள்கை சார்ந்த அரசியலைப் பேசாமல், வெறுப்பு அரசியலை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதாகத் திருமாவளவன் விமர்சித்தார்.

உடனடியாக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ஆளுங்கட்சியை விமர்சிப்பதுடன், வெறுப்பையும் உமிழ்ந்து வருகிறார். இதனால்தான் பல ஜனநாயக சக்திகள் அவருக்கு அறிவுரையும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் கருத்துகளைச் சொல்லி வருவதாகத் திருமாவளவன் தெரிவித்தார்.

வி.சி.க. ஒருபோதும் தனிநபர் விமர்சனம் செய்தது இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) தாங்கள் கடுமையாக விமர்சிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், த.வெ.க. முன்வைக்கும் அரசியல், கொள்கை சார்ந்ததாக இல்லாமல், ஆளுங்கட்சி மீது வெறுப்பை உமிழும் அரசியலாக மட்டுமே இருப்பதால், அதில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.