கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் (Local Body Election), 90 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நாராயணன் நாயர் என்பவர் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் (Ashamannoor Gram Panchayat) இரண்டாவது வார்டில் அவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் தேர்தல் களம் ஆகும்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டமாகச் சென்றுப் பிரச்சாரம் செய்ய, நாராயணன் நாயர் தனி ஒரு மனிதனாக, வெள்ளைச் சட்டை, வேட்டியுடன் ஒரு கருப்புப் பையுடன் வீடு வீடாகச் சென்றுப் பிரச்சாரம் செய்கிறார்.
முதுமை குறித்துக் கேட்கப்பட்டபோது, “எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை” என்று அவர் நம்பிக்கையுடன் பதிலளித்தார். போஸ்டர்கள் மற்றும் பேனர்களை விட மக்களை நேரடியாகச் சந்திப்பதே அதிகப் பலன் தரும் என்றும், வார்டு வளர்ச்சிக்கு நிறைய செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
