மகாராஷ்டிராவின் நாந்தெட் (Nanded) மாவட்டத்தில், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 20 வயது இளைஞர் ஒருவர் அவரது காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவரது காதலி அங்கு வந்து, காதலனின் சடலத்திற்கே திருமாலை அணிவித்து, சடங்குகளை நிறைவேற்றி, அவரது வீட்டில் மருமகளாக வாழ்வதாகச் சபதம் செய்துள்ளார்.

அஞ்சல் (Aanchal) மற்றும் சக்‌ஷம் டேட் (Saksham Tate) என்ற இந்தக் காதலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பழகி வந்த நிலையில், அவர்களின் ஜாதிய வேறுபாட்டின் காரணமாக அஞ்சலின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டது தெரிந்ததும், அஞ்சலின் சகோதரர்கள் மற்றும் தந்தை ஆகியோர் சக்‌ஷமை வியாழக்கிழமை அன்று கடுமையாகத் தாக்கி, தலையில் சுட்டுக் கொன்றதுடன், தலையைக் கல்லால் நசுக்கியுள்ளனர்.

சக்‌ஷமின் இறுதிச் சடங்கின் போது அங்கு வந்த அஞ்சல், அவரது சடலத்தின் மீது மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு, அவரது சடலத்தையே திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார்.

“சக்‌ஷம் இறந்தாலும், எங்கள் காதல் வென்றது” என்று கூறிய அஞ்சல், கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்துள்ளனர்.