சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகின. காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்ததை அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ஆறுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வரவழைக்கப்பட்டன. காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து காரைக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்துகள் ஒன்றோடொன்று மோதியதற்கான காரணம் குறித்தும், ஓட்டுநர்களின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
