சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
இந்த இணைப்பு விழாவின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரின் ஆதரவால்தான் த.வெ.க. தேர்தலில் வென்றதாகக் குறிப்பிட்டதுடன், அ.தி.மு.க.வின் இந்த வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றும், தேர்தலுக்குப் பின் அவர் தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றுயானை பேரம்’ நடத்தியதாகவும் அதிரடியாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், அ.தி.மு.க. நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் த.வெ.க.விற்கு வருவார்கள் என்றும், அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாகப் பேசக்கூடாது என்றும், அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை அவர்கொச்சைப்படுத்துகிறார் என்றும் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேச அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்று குறிப்பிட்ட முனுசாமி, ஆதவ் அர்ஜுனா தனது நாவடக்கத்தைக் காக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க. குறித்துப் பேசுவதை நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
