கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 9 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, எர்ணாகுளம் மாவட்டம் அசமண்ணூர் ஊராட்சியின் 2-வது வார்டில் 90 வயதான நாராயணன் நாயர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

முன்னதாக, அவரது மனைவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதே வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு ஊராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். நாராயணன் நாயர் நீண்டகாலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்தும், இப்போது அந்தக் கட்சியை விட்டு சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.

வாக்குச்சேகரிப்பில் முழுமையாக ஈடுபட்டு வரும் அவர், ஒரு லுங்கி மற்றும் அரக்கை பனியன் அணிந்தபடி மக்கள் வீடு வீடாகச் சென்று மலையாளத்தில் ‘நாட்டுக்காரரே’ (தமிழில் ‘என் மக்களே’) என்று அன்புடன் அழைத்து வாக்கு கேட்டு வருகிறார்.

இது பற்றி நாராயணன் நாயர் கூறியதாவது:  “எனக்கு வயது ஒரு தடையும் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளும் மிகச் செயல்பாடுடன் மக்கள் பணி செய்யத் தயாராக இருக்கிறேன். இங்குள்ள அனைவரும் என்னை நன்கு அறிவார்கள். ஒரு நாளுக்கு 5 வீடுகள் என வீடுதோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். எனக்கு வெற்றி வாய்ப்பு  கிடைக்கும் என்றார். மேலும் அவரின் எளிமை, அணுக்கம், வயதைக் கடந்து வரும் உற்சாகம் ஆகியவற்றால் வாக்காளர்களும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டு அளிப்பதாக உறுதியளித்து வருகின்றனர்.