சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடற்ற பிச்சைக்காரர் ஒருவர், தான் ஓர் வசதி படைத்தவர் போல நடித்து, 10 நாட்களில் ஐந்து பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணம் பறித்துள்ளார். அவர் விலை உயர்ந்த இடங்களுக்குச் செல்வது, புதிய ஆடைகள் வாங்குவது மற்றும் சமீபத்திய ஸ்மார்ட்போனை வாங்குவது என அனைத்தையும் ஏமாற்றிய பெண்களின் பணத்தைக் கொண்டே செய்துள்ளார்.

ஷாங்காய் புடோ மாவட்டப் போலீசில், லியு கியான் என்ற பெண் அளித்த புகாரின் மூலம் இந்தச் சமூக மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 36 வயதான சென் என்ற அந்த நபர், தன்னை ஓர் இரவு விடுதி உரிமையாளராகப் போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு ஏமாற்றியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மோசடி செய்த சென், ஒரு நாள் லியு கியானுடன் விருந்துகளுக்குச் சென்றுவிட்டு, அவருக்கு 3,500 யுவான் தருவதாக உறுதியளித்தார்.

மறுநாள் காலை, சென் கறுப்பு பிளாஸ்டிக் பை ஒன்றில் 50,000 முதல் 60,000 யுவான் வரை பணம் இருப்பதாகக் கூறி, அது ஃபெங் சுய் காரணங்களுக்காக லியுவின் படுக்கைக்கு அடியில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்றைய தினம் வாடகை செலுத்த வேண்டியிருந்ததால், லியு அந்தப் பணத்தில் ஒரு சிறு தொகையைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், சென் போன் பேச வெளியே சென்றபோது, பையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்தது உண்மையான நோட்டுகள் அல்ல; பயிற்சி நோட்டுகள் என்பது தெரிந்து அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

மேலே மற்றும் கீழே இருந்த சில நோட்டுகள் மட்டுமே உண்மையானவை. போலீஸ் விசாரணையில், சென் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பெண்ணுடன் வந்து உணவு, பானங்கள், ஹோட்டல்கள் மற்றும் டாக்ஸிகளுக்குச் செலவு செய்ய வைத்துள்ளார். பெண்கள் அவரிடம் கட்டு கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டதால், அவர் வசதியானவர் என்று நம்பி விரும்பிக் கொடுத்துள்ளனர். சென் ஏமாற்றிய பெண்களின் பணத்தில்தான் தனது ஆடைகளையும் புதிய ஸ்மார்ட்போனையும் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.