பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 31 வயதான ஊழியர் ஒருவர், தனது நண்பர்கள் குழுவால் மிரட்டிப் பணம் பறித்தல், பாலியல் வற்புறுத்தல் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டதாக ஒரு கொடுமையான புகார் அளித்துள்ளார். திண்ட்லுவில் உள்ள புகார் அளித்தவரின் வீட்டில் 2018-ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்த பிரசாந்த் பி.ஆர் என்ற முக்கியக் குற்றவாளி, அவரது தாயார் பயன்படுத்திய குளியலறையில் மறைமுக கேமராவை வைத்து, அவரது அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
தாயார் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, கடந்த 2018 முதல் 2024 வரை அவரிடம் இருந்து ரூ. 50,000-க்கும் அதிகமான தொகையைப் பறித்துள்ளார். வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய குற்றவாளி பிரசாந்த், பாதிக்கப்பட்ட இளைஞரை வெளியிடத்தில் சுய இன்பத்தில் ஈடுபடவும் வற்புறுத்தி, அதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும், அவரைத் தனது நண்பர்களுக்குப் போதைப்பொருள் கடத்தவும் வற்புறுத்தியதுடன், பலமுறை ஆபாசமான புகைப்படங்கள்/வீடியோக்களுக்கு போஸ் கொடுக்கவும், தனது காதலியுடன் பாலியல் செயல்களில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் அவரது ஆதார், பான், வங்கி ஆவணங்கள் உட்படப் பல தனிப்பட்ட ஆவணங்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்டவர் பலமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இது குறித்து யெலஹங்கா புதிய நகரப் போலீசாரிடம்அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பிரசாந்த் உட்பட 11 பேர் மீது தனிநபர் தனியுரிமை மீறல், கொலை முயற்சி, குற்ற மிரட்டல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
