சமூக வலைதளங்களில் ஆபத்தான சாகசங்கள் தொடர்பான விடியோக்கள் அடிக்கடி வைரலாவதுண்டு. அந்த வரிசையில், தற்போது ஒரு இளைஞர் ஓடும் காரில் செய்த ஒரு விநோதமான மற்றும் அபாயகரமான சாகசம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இந்த விடியோவில், சிவப்பு நிறக் கார் ஒன்று ஓடிக்கொண்டிருக்க, அதில் அமர்ந்திருந்த ஒரு நபர் திடீரெனக் காரில் இருந்து இறங்குகிறார்.

ஆரம்பத்தில் இது சாதாரணமாக ஓடும் காரில் இருந்து இறங்கும் சாகசம் என்று தோன்றினாலும், அடுத்த நிமிடத்தில் அவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் காரின் போனட்டைத் திறந்து, அதன் உள்ளே நுழைந்துவிடுகிறார் . காரின் போனட்டிற்குள் நுழைந்த அந்த இளைஞர், அங்கிருந்தபடியே ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக்கை இயக்கி, காரை சுழற்றிச் சுழற்றி ஓட்டுகிறார்.

இதுபோல கார் ஓட்டும் சாகசத்தை ஸ்டண்ட்மேன்கள் காரின் உள்ளே அமர்ந்து செய்வதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், போனட்டில் அமர்ந்து செய்த இந்தச் சமூக பொறுப்பற்ற செயல் பார்ப்பவர்களைப் பயமுறுத்தியது. @TheFigen_ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த விடியோ, இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த விடியோவைப் பார்த்த பயனர்கள், “இது சாகசமல்ல, ஆபத்துடன் விளையாடுவது” என்றும், “இதுபோன்ற அபாயகரமான சாகசத்தை நான் இதுவரை கண்டதில்லை” என்றும் கருத்துத் தெரிவித்து, இந்தச் செயலைச் சாடியுள்ளனர்.