தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து ‘டிட்வா’ (Titwa) புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் புயல், தற்போது சென்னையில் இருந்து தெற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதுடன், மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ‘டிட்வா’ புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
புயலின் தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை (நவ. 28) கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘டிட்வா’ புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், புயல் மற்றும் கனமழை தொடர்பாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து அறிவிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
