கேரளாவின் இடுக்கி (Idukki) மாவட்டத்தில் உள்ள அனாச்சல் பகுதிக்கு அருகில், ‘ஸ்கை டைனிங்’ (Sky-Dining) என்றழைக்கப்படும், கிரேன் (Crane) மூலம் 150 அடி உயரத்திற்கு உயர்த்தப்படும் உணவகம் திடீரெனச் செயலிழந்ததால், அதில் இருந்த குழந்தைகள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவானில் சிக்கித் தவித்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் இந்தக் குழு சிக்கிக்கொண்ட நிலையில், இதுகுறித்தச் செய்தி வெளியான பின்னரே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மாலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

உணவகத்தின் நிர்வாகம் போலீஸ் அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப் படையினர் கயிறுகளைப் பயன்படுத்தி மேலே ஏறி, முதலில் இரண்டு குழந்தைகளுடன் தாயையும், பின்னர் தந்தையையும், கடைசியாக உணவக ஊழியர் ஒருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இது ஒரு சாகச சுற்றுலா (Adventure Tourism) முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும், கிரேன் இயந்திரத்தின் ஹைட்ராலிக் (Hydraulics) பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.