உத்தரப் பிரதேசத்தின் ஷ்ராவஸ்தி மாவட்டத்தில், ஒரு வக்கீல் தனது சூழ்ச்சியால் ஒரு தம்பதியின் மூன்று கடைகளையும் மோசடியாகக் கைப்பற்றியதுடன், மேலும் பணம் மற்றும் பரிசுகளைக் கொடுத்து அந்தத் தம்பதியின் மூன்று மகன்களையே சொந்தப் பெற்றோர்களைக் கொலை செய்யத் தூண்டிய கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நவம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதி இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் ரோஷன் கான் (80) மற்றும் அவரது மனைவி வஸீலா (60) ஆகியோர் மூங்கில் குச்சியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

பிரபாகர் திரிபாதி என்கிற ரிங்கு என்ற அந்த வழக்கறிஞர், முதலில் வஸீலாவை ஏமாற்றிப் போலிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெற்று, தம்பதியின் மூன்று கடைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். பின்னர், அந்தக் கடைகளை அவர் சுமார் ரூ.80 லட்சத்திற்கு வேறொருவருக்கு விற்றுள்ளார்.

இந்த மோசடியால் வஸீலா சட்டரீதியாக நீதிமன்றத்தில் போராட ஆரம்பித்ததால், வழக்குகளைத் தவிர்க்க வக்கீல் திரிபாதி இந்தச் சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். திரிபாதி ஒரு மகனுக்கு மோட்டார் சைக்கிளையும், ரூ.10 லட்சமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியதுடன், மற்ற இரு மகன்களுக்கும் பணப் பலன்களை உறுதி அளித்துள்ளார்.

அதன்பேரில், மூன்று மகன்களும் தூங்கிக்கொண்டிருந்த தங்கள் பெற்றோரை மூங்கில் குச்சியால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். வக்கீல் திரிபாதி உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.