மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை, அவரது சொந்த தாயும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து விபசார தொழிலில் தள்ளியிருப்பதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து இந்த கொடுமைக்கு ஆளாகியதாக சிறுமி தெரிவித்துள்ளார். தாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சிறுமி, வீட்டை விட்டு ஓடி தனது தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பியபோது கடுமையாக அடிக்கப்பட்டதோடு, மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வேதனைகளை தன் தோழியிடம் பகிர்ந்த சிறுமி, பின்னர் தைரியத்துடன் தனது பள்ளி ஆசிரியரிடம் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்து, தகவலை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசில் புகார் அளித்தது.
இதையடுத்து, சிறுமியின் வயதையும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, போலீசார் பல பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார் சம்பவத்துக்கான விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
