திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). இவரது மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு ஏற்கெனவே 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு ஹர்பா பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்தது.

அக்பர் பாஷா வழக்கம்போல் நேற்று (நவ. 25) வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மதியம் 12 மணியளவில், தனது 3 மாதப் பெண் குழந்தை மாயமானதாகக் கூறி அஸ்லியா தஸ்மின் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அஸ்லியா தஸ்மினுடன் சேர்ந்து வீட்டு உரிமையாளரும் குழந்தையைத் தேடியுள்ளனர். அப்போது, சந்தேகப்பட்டு வீட்டின் படிக்கட்டின் கீழ் இருந்த தண்ணீர்த் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாகக் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குழந்தையின் தாய் அஸ்லியா தஸ்மீனே சந்தேக வலையில் சிக்கினார்.

கடுமையான கிடுக்கிப்பிடி விசாரணையில், பெற்றெடுத்தக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் வீசிக் கொலை செய்ததை அஸ்லியா தஸ்மின் ஒப்புக்கொண்டார். “மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாததாலும், தூங்கக் கூட நேரம் இல்லாததாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி குழந்தையைக் கொல்லும் முடிவுக்கு வந்ததாக” அஸ்லியா தஸ்மின் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீசார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர். பெற்ற தாயே கைக்குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.