​தமிழ்நாட்டை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

பலத்த மழையின் காரணமாக பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதால், பள்ளி மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 26) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். எனினும், இதர தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.