நீலகிரி மாவட்டம் குன்னூரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி மக்களைக் கவர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வந்து வேலை பார்த்து, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், வெறும் மாநிலங்களவை (ராஜ்ய சபா) சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும், தொண்டர்களும் மக்களும் விரும்பும் கூட்டணியை மட்டுமே தேமுதிக அமைக்கும் என்றும், இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்தின் காலடியில் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்றும் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும், 2026-க்குப் பிறகு கேப்டனின் கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
