பெங்களூரைச் சேர்ந்த 29 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது பாலியல் ஆரோக்கியப் (Sexual Health) பிரச்சனைக்குத் தீர்வு தேடி, சுய-பிரகடனம் செய்த ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவர் மற்றும் ஒரு மருத்துக் கடை மூலம் ரூ. 48 லட்சம் வரை ஏமாற்றப்பட்டு மோசடிக்கு உள்ளாகி உள்ளார்.
அந்தச் சிகிச்சை அளிப்பவர் ‘தேவராஜ் பூட்டி’ போன்ற அரிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பெரும் விலைக்கு வாங்கச் சொல்லி, அந்த இளைஞனை நம்ப வைத்துள்ளார்.
திருமணமான சில மாதங்களிலேயே பாலியல் ஆரோக்கியப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன், சட்டக் கல்லூரிக்கு அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஒரு ஆயுர்வேதக் கூடாரத்தின் விளம்பரத்தைப் பார்த்தே இந்த மோசடி நபர்களை அணுகியுள்ளார்.
மருந்துகளைப் பணமாகக் கொடுத்து வாங்க வேண்டும் என்றும், வேறொருவர் உடன் வந்தால் மருந்தின் சக்தி போய்விடும் என்றும் அந்த மோசடி நபர் வற்புறுத்தி பணம் பறித்துள்ளார்.
ரூ. 48 லட்சம் வரை செலவழித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இளைஞன் புதிதாகச் சோதனை செய்தபோது, அந்த மருந்துகளால் தனக்குச் சிறுநீரகச் சிக்கல்கள் (Kidney Complications) ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சை அளித்தவர், மருத்துக் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையோரக் கூடாரங்களை அகற்றவும், மோசடி நபர்களைக் கைது செய்யவும் போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
