மேற்கு வங்காள மாநிலம், மேதினிபூர் மாவட்டத்தின் ரத்னேஸ்வராபட்டி கிராமத்தில், ஒரு குடும்பத்தினர் தவறுதலாக அமிலத்தைக் (Acid) கொண்டு சமைக்கப்பட்ட உணவை உட்கொண்டதால், ஆறு பேரும் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளரான சந்து சன்யாசி என்பவர், தனது தாமிரம் மற்றும் வெள்ளி வேலைக்காக (Copper and Silver Work) அமிலத்தை வீட்டில் வைத்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று, சந்து சன்யாசியின் உறவினர் ஒருவர், வீட்டில் வைத்திருந்த அமிலத்தை ‘தண்ணீர்’ என்று தவறுதலாக நினைத்து, அதைக் கொண்டு அரிசியைச் சமைத்துள்ளார். அந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குடும்பத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேருக்கும் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டு, அவர்களது நிலைமை மோசமடைந்துள்ளது.
அமிலத்தை உட்கொண்டதால் வாய், தொண்டை மற்றும் ஒட்டுமொத்த செரிமானப் பாதையின் திசுக்களும் (Tissues) கரைந்து, அழிந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைவரும் ஆரம்பத்தில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கொல்கத்தாவின் SSKM மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
