அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவ. 25) மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் சின்னத்தின் காரணமாகத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழைத் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உருவாகியுள்ள இந்தத் தாழ்வு மண்டலத்தின் எதிரொலியாக, இன்று (நவ. 25) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், இலங்கை அருகே அடுத்த 48 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
