மஹாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் அம்லா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சவிதா பாரத், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குக் குழந்தை பிறந்தது.
இதையடுத்து நேற்று (நவ. 24) தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், மனிதாபிமானமற்ற முறையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சவிதாவின் கிராமத்திற்கு 2 கி.மீ. தொலைவிலேயே வாகனத்தை நிறுத்தி, அவர்களையும், சவிதாவின் தாயார் மற்றும் மாமியாரையும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனால், பிரசவித்த சவிதா, அவரது தாய், மாமியார் என மூவரும் குழந்தையுடன் அந்தத் தொலைவைக் கால்நடையாகவே கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
— Naresh Shende (@NareshShen87640) November 24, 2025
“>
நடக்க முடியாமல் சிரமப்பட்ட சவிதாவைக் கண்ட அவ்வழியே சென்ற நபர் ஒருவர், இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, “அந்தத் தாய்க்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலான நிலையில், மொகதா தாலுகாவின் சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவக் குழுவினர் சவிதாவின் வீட்டிற்குச் சென்று பார்த்ததாகவும், தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடும் அவலம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
