கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). திருமணமான இவருக்கு 8 வயது மகன் உள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரபாகரன், தொழிற்பேட்டை பகுதியில் ஒரு இளம் பெண் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை கவனித்ததாக கூறப்படுகிறது.
அங்கு சென்று விசாரிப்பு என்ற பெயரில், அந்த வாலிபரிடம் இருந்த ரூ.8,000 பணத்தை பிரபாகரன் பறித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. பின்னர் வாலிபரை அங்கிருந்து அனுப்பிவிட்டு, அந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும், அப்போது பிரபாகரனுடன் ரோந்து பணியில் சென்றிருந்த 35 வயது போக்சோ கைதி கௌதமனும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இளம்பெண் தப்பித்து தனது நண்பருடன் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, செப்டம்பர் 20ஆம் தேதி பணிக்கு வந்த பிரபாகரனை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பிரபாகரன், தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறு மேலதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் உயர் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரன் தனது 8 வயது மகனை அழைத்துக்கொண்டு கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் அருகே மரத்தடியில் அமர்ந்து யாசகம் எடுத்தார். இது அந்த பகுதி காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க, அவர்கள் சமாதானப்படுத்தி பிரபாகரனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், பலர் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். ஆனால் பின்னர் இது திட்டமிட்ட நாடகம் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வருவதற்குமுன் பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து, அவர்கள்முன் பிச்சை எடுப்பது போல நடித்து, மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வெளியிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்களிடம் பிரபாகரன் கூறியதாவது: “என் மீது பொய்யான வழக்கு போட்டு சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். 2½ மாதங்களாக வருமானமில்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கிறேன். அதனால் தான் கோவில் முன்பு யாசகம் எடுக்க வந்தேன்” என தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரபாகரன் மீது உள்ள வழக்கில் ஆதாரங்கள் உறுதியாக உள்ளதாகவும், குற்றமற்றவர் என காட்டிக்கொள்ளவே இவ்வாறு நாடகம் நடத்தி வருகிறார் எனவும், சக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
