கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே சிக்கபானவரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளைஞரும் இளம்பெண்ணும் மர்மமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மரணமடைந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (20), ஸ்டெர்லின் எலிசா சாஜி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து, சிக்கபானவரா பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் மதியம் விடுதியில் இருந்து வெளியேறிய இருவரும், பின்னர் தண்டவாளத்தில் பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் மோதி இருவரும் உயிரிழந்ததாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன.

உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருவரும் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் தெளிவுபடுத்த, வந்தே பாரத் ரெயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளும் பரிசோதிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.