சிம்கார்டு, ஆன்லைன் மோசடி அல்லது இதர சட்டவிரோத காரியங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளரே குற்றவாளியாகக் கருதப்படக்கூடும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் சிம்கார்டை மற்றவர்களுக்கு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போலி ஆவணங்கள், மோசடி அல்லது ஆள்மாறாட்டம் மூலம் சிம்கார்டு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்போன்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ. (IMEI) எண்களைச் சிதைத்தல், திருத்துதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றுக்குத் தொலைதொடர்பு விதிமுறைகள்-2024 தடை விதிப்பதாகவும், அத்தகைய செல்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்களைச் சிதைப்பது உள்ளிட்ட தொலைதொடர்புச் சட்டத்தை மீறும் காரியங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது ₹.50 லட்சம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்றும் மத்திய தொலைதொடர்புத் துறை எச்சரித்துள்ளது.
செல்போனின் வர்த்தகப் பெயர், மாடல், உற்பத்தியாளர் தகவல் ஆகியவை குறித்த ஐ.எம்.இ.ஐ. எண்களின் விவரங்களை, பொதுமக்கள் ‘சஞ்சார் சாதி’ (Sanchar Saathi) என்ற வலைத்தளம் அல்லது செல்போன் செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், உதிரிபாகங்கள் இணைக்கப்பட்ட மோடம் உள்ளிட்ட சாதனங்களை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
